ஆம்னி பஸ் - பைக் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு

சாத்துார்: பைக் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர்கள் கோகுல், 17, பிரசன்னா, 17, யுவராஜ், 17. மூவரும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, பைக்கில், உப்பத்துாரில் உள்ள பால்பண்ணைக்கு சென்றனர். அங்கு, டீ குடித்து விட்டு இரவு, 11:30 மணிக்கு கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழி சாலையில், எதிர் திசையில் பைக்கில் வேகமாக சென்றனர்.

சாத்துார் பெரிய கொல்லப்பட்டி விலக்கு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரில் வந்த ஆம்னி பஸ், இவர்களின் பைக் மீது மோதியது. இதில், பிரசன்னா, யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கோகுல் உயிரிழந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement