தி.மு.க., பிரமுகர்கள் வீட்டில் வருமான வரித்துறை 'ரெய்டு'
மதுரை: மதுரை, திருச்சியில், தி.மு.க., பிரமுகர்கள் வீடு, நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மதுரை கற்பகநகர், 11வது தெருவை சேர்ந்த தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம்; விரகனுாரில் 'ரெடி மிக்ஸ்' நிறுவனம் வைத்துள்ளார். ரோடு உள்ளிட்ட ஒப்பந்த பணிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேர்தல் நேரம் என்பதால் இவர் கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தார்.
அவரது வீடு அருகே வடக்கு தொகுதிக்கான ஐ.டி., விங், வார் ரூம் பகுதிக்கும் சென்று வந்தார். அப்பகுதியில், வாக்காளர்களுக்கு, சிலர் பணம் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆறுமுகம் மீது ஏற்கனவே அளிக்கப்பட்ட வரி ஏய்ப்பு புகார்கள் அடிப்படையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
மற்றொரு குழு, அவரது விரகனுார் நிறுவனத்திலும் சோதனை நடத்தியது. இதில், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
அதேபோல, திருச்சி, மணப்பாறை கிழக்கு தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி. இவர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர். மணல் கடத்திய வழக்குகள் இவர் மீது உள்ளன.
நேற்று மணப்பாறை அருகே உள்ள முத்த புடையான்பட்டியில் உள்ள ஆரோக்கியசாமியின் வீடு, ஆண்டவர் கோவில் அருகே உள்ள அவரின் அலுவலகத்தில், நேற்று மதியம், 3:00 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இரவு, 8:30 மணிக்கு சோதனையை முடித்து, வருமான வரித்துறையினர் கிளம்பினர்.