திறந்து கிடக்கும் மின்பெட்டி தாட்டித்தோப்பில் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு, முருகன் குடியிருப்பில் சாலையோர மின்கம்பத்தில் சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து கிடக்கும் மின்பெட்டியால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு தாட்டித்தோப்பு, முருகன் குடியிருப்பில் உள்ள தெரு மின்விளக்கு பராமரிப்பதற்காக மின்கம்பத்தின் அடிபாகத்தில் மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின்பெட்டியில், பியூஸ் கேரியர், மின் மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மின்இணைப்பு ஒயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது.

இவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மின்பெட்டியில் உள்ள மின் உபகரணங்கள் மற்றும் மின் ஒயர்களை தொட்டால், மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திறந்து கிடக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாட்டித்தோப்பு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement