வாலாஜாபாதில் வேர்க்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டார பகுதிகளில், வேர்க்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாலாஜாபாத் பகுதிகளில், பாலாறு மற்றும் ஏரி பாசனம் வாயிலாக விவசாயிகள் ஆண்டுதோறும் வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பருவ மழையை தொடர்ந்து, டிசம்பர் மற்றும் ஜனவரியில் விவசாயிகள் நிலங்களை உழவு செய்து வேர்க்கடலை விதையிட்டனர்.

வேர்க்கடலை செடிகள் செழிமையாக வளர்ந்து தற்போது பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இதையடுத்து, அங்கம்பாக்கம், அவளூர், ஆசூர், புளியம்பாக்கம், நாய்க்கன்குப்பம், ஓடந்தாங்கல், புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம், லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேர்க்கடலை அறுவடை பணிகள் விறு, விறுப்பாக நடைபெறுகின்றன.

இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தில் திருமுக்கூடல், பினாயூர், சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில், பாலாற்று பாசனம் சாகுபடி செய்திருந்த வேர்க்கடலையை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேர்க்கடலை சாகுபடி செய்த நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து ஏற்படுத்திய சேதம் மற்றும் பூவெடுத்த பருவத்தில் திடீர் மழை பொழிவு போன்றவையால் வேர்க்கடலை செடிகளில் சரி வர காய் பிடிக்காமல் மகசூல் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement