தபால் ஓட்டுப்பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள் 

உடுமலை: தேர்தலின் போது, ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல்கட்ட தபால் ஓட்டு பதிவு நடந்தது. தங்கள் சொந்த தொகுதி ஓட்டுச்சீட்டை பெற்று, ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டுப்பதிவின் போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் - 1, 2, மற்றும் 3 என நான்கு பேர் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபடுவர்.

10 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கி ஒரு மண்டலம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் துணை தாசில்தார் நிலையிலான, அதிகாரி மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சட்டசபை தொகுதிவாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உடுமலை தொகுதியில், 307 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,800 பேரும், மடத்துக்குளம் தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற, 1,412 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தபால் ஓட்டு பதிவு செய்ய படிவம் '12டி' வழங்கியுள்ளனர். இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று முன்தினம் நடந்த நிலையில், அவர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவும் நடந்தது.

ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ள, வெவ்வேறு தொகுதிகளை சேர்ந்த அலுவலர்கள், தங்கள் சொந்த தொகுதியிலிருந்து அனுப்பப்பட்ட ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி, தபால் ஓட்டு பதிவு செய்தனர். ஓட்டுச்சீட்டில், தங்கள் அபிமான வேட்பாளரை தேர்வு செய்தனர்.

ஓட்டுச்சீட்டு மற்றும் உறுதி மொழி கடிதத்தை இணைத்து கவரில் வைத்து, ஓட்டு பெட்டிக்குள் போட்டனர். இவ்வாறு, உடுமலை தொகுதியில், 347 பேர் என, தபால் ஓட்டு பதிவு செய்தனர்.

மாலையில் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுச்சீட்டுகள் தொகுதிவாரியாக சேர்க்கப்பட்டு, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன; அங்கிருந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், தனியே அனுப்பிவைக்கப்பட உள்ளன. விடுபட்ட அலுவலர்கள், வரும் 19ம் தேதி தபால் ஓட்டு பதிவு செய்வர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

@block_B@

போலீசாருக்கு எப்போது?

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இதர பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள், இன்று (17ம் தேதி) முதல் வரும், 20ம் தேதி வரை, தங்கள் பணியாற்றும் தொகுதிகளில் அமைக்கப்படும் வழிகாட்டி மையங்களில், உரிய படிவங்களை பெற்று, தபால் ஓட்டு பதிவு செய்யலாம், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.block_B

Advertisement