'அஞ்சு நிமிஷம் நிக்க முடியல 5 ஆண்டுகளில் எப்படி கவனிப்பார்?'

18

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நெடுகனேந்தல் கிராமத்தில், ஓட்டு சேகரிக்க சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சுழி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி அருகே உள்ள நெடுகனேந்தல் கிராமத்திற்கு, ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து, சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

'கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. தற்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கீங்க. பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. நல்லா இருந்த பாலத்தை உடைத்து, கட்டி முடிக்காமல் வைத்துள்ளனர். குடிநீர் தொட்டி அழுக்காக உள்ளது. அந்த தண்ணீரை தான் நாங்கள் குடிக்கிறோம்' என புகார் தெரிவித்தனர்.

அருகிலிருந்த தி.மு.க., நிர்வாகி, அவர்களை தடுக்க முயன்றபோது, 'எங்களை பேச விடுங்கள்' என, மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்து, 'இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லுங்கள்' என்றனர்.

ஆனால், தங்கம் தென்னரசு பதில் அளிக்காமல், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். கொதிப்படைந்த மக்கள், பரப்புரையின் போது வழங்கப்பட்ட 8,000 ரூபாய்க்கான போலி கூப்பன்களை, அங்கேயே கிழித்து போட்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

'ஐந்து நிமிடம் நின்று குறைகளை கேட்க முடியாதவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் எங்களை எப்படி கவனிப்பார்' என கேள்வி எழுப்பியதுடன், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என, ஆவேசமாக முழக்கமிட்டனர்.

Advertisement