பகலில் பற்றாக்குறை; இரவில் துண்டிப்பு: துாக்கம் தொலைத்த நாவினிபட்டி பொதுமக்கள்

மேலுார்: நாவினிபட்டியில் பகலில் குறைந்த அளவு மின்சார வினியோகமும், இரவு முழுவதும் துண்டிப்புமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

நாவினிப்பட்டி கிராமத்துக்கு கீழையூர் மின்வாரிய அலுவலகம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. கிராமத்தில் குறிப்பாக சீதக்காதி தெருவில் 6 மாதங்களாக தினமும் இரவில் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. இதனால் தெரு முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. அதிகாரிகளை தொடர்பு கொண்டால் டிரான்ஸ்பார்மர் புகைந்து விட்டது எனத் தவறான தகவலை தெரிவிக்கின்றனர் என்பது மக்களின் குற்றச்சாட்டு.

அப்பகுதி ஜாகிர் உசேன் கூறியதாவது: பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தினமும் இரவில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, துாங்க முடியாமல் தவிக்கிறோம். பகலில் குறைந்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மின்சாதன பொருட்களும் பயன்படுத்த முடியாமல், குளிக்க, சமைக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.

மின்அழுத்த மாறுபாடாலும் மின்சாதனங்கள் புகைந்து விடுகின்றன. இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் யாரும் பொருட்படுத்தவே இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மின்வாரிய ஏ.டி., சந்திரசேகர் கூறுகையில், ''ஆறு மாதம் மின்வினியோகம் துண்டிப்பு என்பது தவறு. மின்வினியோகம் இல்லை எனத் தெரிந்ததும் சப்ளை கொடுத்து வருகிறோம். மின்வினியோகத்தை முறையாக கொடுக்க மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்ற ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.

Advertisement