ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

கரூர் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

தமிழகத்தில் வரும், 23ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் விஜயபாஸ்கர், தி.மு.க., ஆசி.தியாகராஜன், த.வெ.க., மதியழகன், நா.த.க., கருப்பையா உள்பட, 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரவக்குறிச்சியில், தி.மு.க.,வில் இளங்கோ, அ.தி.மு.க., செல்வகுமார், த.வெ.க., கார்த்திகேயன், நா.த.க., நரேன் உள்பட, 30 பேர் களத்தில் உள்ளனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க.,வில் டாக்டர் திவ்யா, தி.மு.க., ராஜா, த.வெ.க., எம்.சத்யா, நா.த.க. வி.சத்யா உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குளித்தலையில் அ.தி.மு.க., கருணாகரன், தி.மு.க., சந்திரன், த.வெ.க., பாலசுப்பிரமணியன், நா.த.க. நன்மாறன் உள்பட, 29 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி, 267 ஓட்டுச்சாவடி, கரூர், 283 ஓட்டுச்சாவடி, கிருஷ்ணராயபுரம், 275 ஓட்டுச்சாவடி, குளித்தலை, 286 ஓடடுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ரேண்டமைசேஷன்' செய்யும் பணி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு ஒதுக்கப்படும் இயந்திரங்களின் எண்கள் காண்பிக்கப்பட்டு, அவை ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டுகள் பொருத்தும் பணி மற்றும் 'விவிபேட் ' இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதில், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்பாக இப்பணி நடந்தது. தேசிய கட்சிகள், அதனையடுத்து, மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என வரிசைப்படுத்தி 'பேலட் பேப்பர்' அச்சடிக்கப்பட்டுள்ளன.
பேலட் பேப்பரில், வேட்பாளர் பெயர், அவரது புகைப்படம், சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement