பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை

பெங்களூரு: 'ஐ.டி., நகர் என புகழப்படும் பெங்களூரு, சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களின் புகலிடமாக மாறுகிறது. இதை கட்டுப்படுத்தாவிட்டால், வரும் நாட்களில் பிரச்னைகள் ஏற்படும்' என, நகர வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பெங்களூரு அதிவேகமாக வளர்ந்து வரும் நகராகும். ஐந்து மாநகராட்சிகள் அடங்கிய பெங்களூரில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். பணி, வர்த்தகம், கல்வி உட்பட பல காரணங்களால் பெங்களூரில் வசிக்கின்றனர். தொழில் தொடர்பாக, சில வெளி நாட்டினர் அவ்வப்போது நகருக்கு வந்து செல்கின்றனர்.

சில நாடுகளின் நபர்கள், பெங்களூருக்கு வந்து தங்கினால், மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு செல்லாமல் இங்கேயே உள்ளனர். விசா காலம் முடிந்தாலும், நாடு திரும்பாமல், சட்டவிரோதமாக இங்கேயே வசிக்கின்றனர். இவர்களில் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களே அதிகம்.

கல்வி விசாவில் வரும், சில வெளி நாட்டு மாணவர்கள், சரியாக படிக்காமல் பெயிலாகி, பெங்களூரில் தங்கி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். வர்த்தக விசாவில் வரும் ஆப்ரிக்கா நாட்டவர்கள் சிலர், துணி வியாபாரம் என்ற பெயரில் போதைப்பொருள் விற்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக வசிக்கும் சில வெளிநாட்டவர்கள், டார்க் வெப் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு விதமான போதைப்பொருட்களை வரவழைத்து விற்கின்றனர்.

பெங்களூரு போலீசார், போதைப்பொருட்களை ஒழிக்க, இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். ஆங்காங்கே சோதனை நடத்தி, போதைப்பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கைதாகும் நபர்களில் குறைந்தபட்சம் ஒருவர், வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கிறார்.

வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்ன செய்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்தெந்த நாடுகளில் இருந்து, எத்தனை பேர், என்னென்ன விசாக்களில் வந்துள்ளனர் என்ற முழுமையான தகவல்கள், எப்.ஆர்.ஆர்.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு தெரியும்.

ஆனாலும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், விசா முடிந்த பின் அவரவர் நாடுகளுக்கு திரும்பினார்களா, இங்கேயே இருக்கின்றனரா என்பதை பரிசீலிப்பது இல்லை. சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீஸ் நிலையங்களின் எல்லையிலும், வெளிநாட்டு நபர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் யாருடைய வீட்டில் வாடகைக்கு உள்ளனர், என்ன விசாவில் பெங்களூரில் தங்கியுள்ளனர், என்ன வேலை செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை விசா முடிந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்தால், எப்.ஆர்.ஆர்.ஓ., அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், போலீசாரும் அந்த பணியை செய்வது இல்லை.

பெங்களூரு சட்டவிரோதமாக வசிக்கும் நபர்களின் புகலிடமாக மாறுகிறது. இது, நகரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement