மனைவியை கொன்ற கணவர் ஓட்டம் நியாயம் கேட்டு பெற்றோர் புகார்

தாவணகெரே: கள்ளத்தொடர்புக்காகவும், வரதட்சணைக்காகவும் மனைவியை கொன்று விட்டு ஓட்டம் பிடித்த கணவரை, போலீசார் தேடுகின்றனர்.

தாவணகெரே மாவட்டத்தின் மன்டலுார் கிராமத்தில் வசித்தவர் காவ்யா, 22. இவருக்கும், சென்னகிரி தாலுகாவின் ஹோதிகெரே கிராமத்தை சேர்ந்த மனு, 28, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மனு, தபால் துறையில் பணியாற்றுகிறார். இதனால், காவ்யாவின் பெற்றோர், ஏழை குடும்பத்தினராக இருந்தாலும், பல இடங்களில் கடன் வாங்கி, 2.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 70 கிராம் தங்கநகைகளை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை நடத்தினர். தாவணகெரேவின், அர்ஸ் லே - அவுட்டில் தம்பதி வசித்தனர்.

மனுவுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. போதைப்பழக்கமும் இருந்தது. இதையறிந்து கேள்வி எழுப்பிய மனைவியை, அடித்து கொடுமைப்படுத்தினார். தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி நெருக்கடி கொடுத்தார். கணவரின் கொடுமை பற்றி காவ்யா, தன் பெற்றோரிடம் கூறி வருந்தியுள்ளார்.

இந்நிலையில், தன் தாய் வீட்டினருடன், மந்த்ராலயாவுக்கு சென்று வர காவ்யா தயாரானார். நேற்று முன்தினம் இவர்கள், மந்த்ராலயாவுக்கு செல்லவிருந்தனர். வாகனத்துடன் காவ்யாவுக்காக அனைவரும் காத்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. மதியம் அவருக்கு போன் செய்த போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

இரவு தன் மாமியாருக்கு போன் செய்த மனு, 'காவ்யா மயக்கம் அடைந்து உள்ளார்; பேசவில்லை' என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

பீதியடைந்த காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, அவர் சலனமின்றி படுத்திருந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்தார். மனு தப்பியோடி விட்டார்.

அவரே தங்கள் மகளை அடித்து கொலை செய்ததாக, தாவணகெரே மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

கணவர் தன்னை கொடுமைப்படுத்தியது, அவரது போதைப்பழக்கம், கள்ளத்தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை, ஒரு பென் டிரைவில் காவ்யா சேகரித்து வைத்திருந்தார். இதுபற்றி பெற்றோர் கூறியுள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Advertisement