கமிட்டியில் விலைப்பட்டியல் வெளியிட மறுப்பு; விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கமிட்டியில் வர்த்தகர்கள் விளைபொருட்களுக்கான விலைப்பட்டியல் வெளியிட மறுத்ததால், விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் குடோன்கள், விவசாயிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்தது. வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கமிட்டி குடோன்கள், பல அறைகள் காலி செய்யப்படவில்லை. தற்போது எள் சீசன் துவங்கி, தினமும் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது.

தற்போதுள்ள குடோனில் விளைபொருட்கள் வைக்கவும், அங்கிருந்து லாரிகளில் எடுத்து செல்ல முடியாமல் வர்த்தகர்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில், கமிட்டி குடோனுக்கு செல்லும் பாதை அடைத்து வைத்துள்ள தடுப்பு சுவரை உடனடியாக அகற்றகோரி வர்த்தகர்கள் நேற்றைய விளைபொருட்களுக்கு விலைப்பட்டியல் வெளியிடாமல் தாமதித்தனர்.

இதனால் கோபமடைந்த விவசாயிகள் கமிட்டி எதிரே கச்சிராயபாளையம் சாலையில் காலை 10.:45 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, கமிட்டி கண்காணிப்பாளர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது. காலை 11:15 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கச்சிராயபாளையம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement