ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு

மதுரை: ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணிஒதுக்கீடு செய்யப்பட்டது.

சட்டசபைத் தேர்தல் (ஏப்.23) காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்க உள்ளது. மாவட்ட அளவில் 3079 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஓட்டுச் சாவடியில் ஒரு தலைமை அலுவலர், அவருக்கு கீழ் 3 நிலை அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

தேர்தலில் பணிபுரிய உள்ள 14 ஆயிரம் அலுவலர்கள், 6 ஆயிரம் போலீசார், 400 மைக்ரோ அப்சர்வர்கள் ஆகியோருக்கு பணிஒதுக்கீடு நடந்தது. கம்ப்யூட்டரில் சுழற்சி முறையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சமர்த்வர்மா, வேத்பதி மிஸ்ரா, அந்தரா ஆச்சார்யா, தினேஷ்குமார், மிங்மா ஷெர்பா தலைமையில் பணி ஒதுக்கீடு நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீட்சீத், எஸ்.பி., அரவிந்த் முன்னிலை வகித்தனர். ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்துள்ளன. இன்று 3வது பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் அனைத்து அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்த ஓட்டுச்சாவடி விவரங்கள் தெரிவிக்கப்படும்.

Advertisement