தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு

போடி:போடி அருகே பத்திரகாளிபுரத்தில் 45 ஆண்டுகளாக முன் விதிக்கப்பட்ட தடையால் தேர்தலில் கட்சி கொடி, போஸ்டர் ஏதும் இன்றி மாதிரி கிராமமாக விளங்கி வருகிறது.

தேர்தல் என்றாலே தெருவெங்கும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு கொண்டு சுவர்களில் சின்னங்கள் வரைவது, தோரணம் கட்டுவது வாடிக்கை. போடி அருகே பத்திரகாளிபுரம் தேர்தல் நடக்கின்ற அறிகுறியே இல்லாத வகையில் கட்சி கொடி, போஸ்டர், தோரணம் இன்றி முன்மாதிரியாக உள்ளது.

இக்கிராமத்தில் 1980 ல் இரு கட்சியினரிடையே கட்சி அலுவலகம் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு கலவரமாகியது. அதன்பின் கிராம கமிட்டி ஒன்று கூடி தேர்தலுக்காக ஊரில் கட்சி கொடி, நோட்டீஸ், தோரணங்கள், காரியாலயம், மைக்செட் கட்டுவது, வீடுகளில் கட்சி கொடி பறக்க விடுவதற்கு தடை விதித்தது. தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து ஓட்டுகேட்கலாம். அப்போது கையில் கொடி பிடித்து கொள்ளலாம் என தீர்மானித்தனர். கோயில் திருவிழாக்களின் போது அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை பேனரில் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இக் கட்டுப்பாட்டை 45 ஆண்டுகளாக பின்பற்றப்படகிறது. தற்போது சட்டசபை தேர்தலிலும் கிராமத்தில் பிரசாரம், கட்சி சின்னம், கொடி என ஆரவாரம் இன்றி உள்ளது. வேட்பாளர் பிரசாரத்தின் போது வாகனங்களில் மைக்செட் கட்டியும் பிரசாரம் செய்கின்றனர்.

டி. கருப்பையா, பத்திரகாளிபுரம் : பெரும் பாலும் இங்கு ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக வசித்து வருகின் றோம். தேர்தலால் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு, உறவுகள் இடையே பகைமை ஏற்படுத்தியது. இதனால் கிராம கமிட்டி விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறோம். பிரசாரத்தின் போது வேட்பாளர் ஓட்டு கேட்க வரும் போது உடன் வருபவர்கள் கட்சி துண்டு, கொடி வைத்து கொள்ளலாம். இதனால் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக உள்ளோம். இதுபோல மற்ற கிராமங்களும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதை எங்களது விருப்பம் என்றார்.

Advertisement