விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி:  உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி

உசிலம்பட்டி: தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி காங்., வேட்பாளராக சரவணகுமார் போட்டியிடுகிறார்.

வெற்றி பெற்றால் தொகுதிக்கான வாக்குறுதிகள் குறித்து அவர் கூறியதாவது: உசிலம்பட்டியில் பெண்களுக்கென தங்கும் விடுதியுடன் கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டு வரப்படும். உசிலம்பட்டியின் நீராதார திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தில் ஆண்டு தோறும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நிரந்தர அரசாணை பெற்றுத்தருவேன். உசிலம்பட்டி பகுதியில் அதிகமாக விளையும் பூக்களுக்கு நிரந்தரமாக அதிக விலை கிடைக்கும் வகையில் வாசனைத்திரவியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஏற்படுத்தி தருவேன்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இருபாலரும் வேலை வாய்ப்பு பெற வசதி ஏற்படுத்தி தருவேன். உசிலம்பட்டியின் மையத்தில் உள்ள கண்மாய் துார்வாரி தண்ணீர் நிற்பதற்கு ஏற்பாடு செய்வதுடன் கரையை பலப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கான வசதி செய்து கொடுப்பேன். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகளை விரைவுபடுத்தி நவீன வசதிகளுடன் கூடியதாக ஏற்படுத்தி தருவேன். நகர், கிராமப்பகுதிகளில் சோலார் மின்விளக்குகள் பொருத்தி மின்கட்டணம் குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்வேன்.

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்தி மாணவர்களின் விளையாட்டுத்திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். தி.மு.க., அரசு அறிவித்துள்ள மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

Advertisement