'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்

பெங்களூரு: கே.சி., வேலி, பெல்லந்துார் அமினிகெரே, விஸ்வேஸ்வரா வேலி, ஹெப்பால் வேலி ஆகிய இடங்களில் கழிவுநீரில் இருந்து பயோகாஸ் எனும் உயிரிவாயு உற்பத்தி செய்யும் திட்டத்தை பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., எனும் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் செயல்படுத்த உள்ளது.

ஐந்து நிலையங்கள் பெங்களூரில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க 34 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவை தினமும், 134.85 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வருகின்றன.

இந்த கழிவுநீரில் இருந்து 'லிக்விட்' வடிவிலான உயிரிவாயுவை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., ஆய்வு செய்து வந்தது. முதற்கட்டமாக கே.சி.,வேலியில் இரண்டு, பெல்லந்துார் அமினிகெரே, விஸ்வேஸ்வரா வேலி, ஹெப்பால் வேலி ஆகிய மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தலா ஒன்று என, மொத்தம் ஐந்து உயிரிவாயு உற்பத்தி நிலையங்கள் அமைக்க அரசுக்கு பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., முன்மொழிந்தது.

இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தினமும் 55 கோடி லிட்டர் கழிவுநீரை உயிரிவாயு உற்பத்திக்கு விற்பனை செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை ஈட்டுவதுடன் அவற்றை நிர்வகிப்பதில் தனக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளை அரசு ஆராய்ந்து வந்தது. அவற்றில் கழிவுநீர் கசடை காசாக்கும் பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., முன்மொழிவு அரசை ஈர்த்தது.

மதிப்பீடு பொது - தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தால், ஆண்டுக்கு பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.,க்கு 120 கோடி ரூபாய் வருவாய் கிடைக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்படும் உயிரிவாயு அங்கே மின் உற்பத்திக்கு பயன்படுத்தவும் உயிரிவாயு உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தியபின், அதை விற்பனைக்கான கட்டமைப்புடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.,யின் தலைவர் வி.ராம் பிரசாத் மனோகர் தெரிவித்தார்.



==புல் அவுட்==

அடுத்த ஆறு மாதங்களில் இந்த முழுத் திட்டமும் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் குழாய்வழி எரிவாயு இணைப்புகளுக்கு அருகாமையில் இருப்பதன் அடிப்படையில், ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 30,000 கன மீட்டர் வரை சுத்திகரிப்பு இருக்கும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் வளாகத்திலேயே உயிரிவாயு உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக நிலம் வழங்கப்படும். மேலும், இந்த ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குமான திட்டப்பணிக்கு ஏலம் கோரும் தனியார் தரப்பினரே முழு செலவையும் ஏற்றுக்கொள்வார்கள்.

வி.ராம் பிரசாத் மனோகர்,

பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., தலைவர்

Advertisement