வைட்டமின் 'ப' வராததால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பரிதவிப்பு

10

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சி தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த அளவு வைட்டமின் 'ப' வராததால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும் களத்தில் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
இந்த தேர்தலில், 167 இடங்களில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன் வாக்காளர்களை கவனிக்க, கட்சி தலைமையில் இருந்து வைட்டமின் 'ப' வரும் என, வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள 42 தொகுதிகளுக்கு, கடந்த 17ம் தேதி அமாவாசை அன்று, வைட்டமின் 'ப' வந்து சேர்ந்தது.

ஆனால், எதிர்பார்த்த அளவு வராததால், வேட்பாளர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும், 63 தொகுதிகளுக்கு, தலைமையிடம் இருந்து எந்த வைட்டமினும் இதுவரை வந்து சேரவில்லை. இதுநாள் வரை, தங்களிடம் இருந்த வைட்டமின் 'ப'வை வைத்து தேர்தல் பணிகளை சமாளித்தனர். ஆனால், வாக்காளர்களை கவனிக்க மேலிடத்தில் இருந்து வந்தால்தான், தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என, வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, மேலிடத்திற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் கேட்டபோது, 'கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்தாச்சு; இனி நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என வேட்பாளர்களுக்கு பதில் கிடைத்துள்ளது. சீட்டை உறுதி செய்ய, மேலிடத்துக்கு சில பைகளை, வேட்பாளர்கள் கொடுத்து வைத்தனர். அந்த பைகள், தேர்தல் நெருக்கத்தில் திருப்பி அளிக்கப்படும் என்று சொல்லியே வாங்கி வைக்கப்பட்டன.

ஆனால், சொன்னபடி அந்த பைகளும் வராததால், வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு வைட்டமின் 'ப' வராததால், கடைசி நேர கவனிப்புகளுக்குப் பின், வெற்றி கிட்டும் என்ற நிலையில் உள்ள தொகுதிகளும் கைநழுவும் நிலை ஏற்பட்டு, வேட்பாளர்கள் பரிதவிக்கின்றனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

Advertisement