திருப்போரில் அரசு மருத்துவமனை கொண்டு வருவேன்: பன்னீர்தாஸ் வாக்குறுதி

திருப்போரூர்:''திருப்போரூர் தொகுதியில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன்,'' என, இறுதி நாள் பிரசாரத்தில், வி.சி.க., வேட்பாளர் பன்னீர்தாஸ் வாக்குறுதி அளித்தார்.

திருப்போரூர் தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், வி.சி.க., வேட்பாளர் பன்னீர்தாஸ் போட்டியிடுகிறார். இவர் நேற்று, தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.

அதன் பின் ஓ.எம்.ஆர்., சாலையில் காலவாக்கத்தில் பேரணியாக சென்று, திருப்போரூர் ரவுண்டானா, அம்பேத்கர் சிலை அருகே பிராசாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரத்தின் போது, வி.சி.க., வேட்பாளர் பன்னீர்தாஸ் பேசியதாவது:

திருப்போரூர் தொகுதியில் நீண்டகாலமாக பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா கிடைக்கவும், குன்னப்பட்டு, ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க முயற்சிப்பேன்.

வேளாண் விளை பொருட்களை பாதுகாக்காக பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்கப்படும். திருப்போரூர் பேரூராட்சிக்கு பாலாறு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து தருவேன். அனைத்து கிராமத்திற்கும் தரமான சாலைகள், சிற்றுந்து சேவைகள் இயக்கப்படும்.

திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிமக்கள் பெரிய அளவில் அரசு மருத்துவமனை இல்லாமல் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, திருப்போரூரில் நவீன வசதிகளுடன் அரசு பொது மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில், திருப்போரூர் தெற்கு தி.மு.க., ஒன்றிய செயலர் பையனுார் சேகர், தி.மு.க., நிர்வாகிகள் எபிநேசர், தாமோதரன், பூபதி, அருள், சேகர், வி.சி.க., நிர்வாகிகள் அன்பு, செல்வம், ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

***

Advertisement