புதிதாக 5 'அம்ரித் பாரத்' ரயில்கள்; ஐ.சி.எப்., தயாரிக்க வாரியம் அனுமதி

1

சென்னை: புதிதாக ஐந்து, 'அம்ரித் பாரத்' ரயில்களை தயாரிக்க, சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கிஉள்ளது.

'வந்தே பாரத்' ரயிலைத் தொடர்து, 'அம்ரித் பாரத்' ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத்துக்கு இணையான வேகமும், பாதுகாப்பும் கொண்ட அம்ரித் பாரத் ரயில், 'புஸ் புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திட்டம்



இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜினால் இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில், 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட, 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும்.

ஐ.சி.எப்., ஆலையில் மட்டும், 200 அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுதும் தற்போது, 30 வழித்தடங்களில், 60 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், தாம்பரம் - மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டா, தாம்பரம் - கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நாகர்கோவில் - மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பய்குரி உள்ளிட்ட வழித்தடங்களில், அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அம்ரித் பாரத் வகை ரயில்களில், பயணியர் கூடுதல் வசதி பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய வகை பெட்டிகளை தயாரித்து இணைக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள நவீன பெட்டிகளுடன் கூடிய முதல் ரயில் தயாராகிஉள்ளது.

அனுமதி



இந்த புதிய பெட்டிகளில், மேம்படுத்தப்பட்ட தரை, இருக்கை மற்றும் படுக்கை, சிற்றுண்டி மேஜைகள், திரைச்சீலைகள் இடம் பெற்றுள்ளன. பயணியரை கவரும் வகையில் உள் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணியர் தேவை அதிகமாக உள்ள தெற்கு ரயில்வேக்கு, ஐந்து அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து வழங்க, ஐ.சி.எப்.,க்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கிஉள்ளது.

இந்த ரயில்கள் வந்தவுடன், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அம்ரித் பாரத் ரயில்களை இயக்க உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement