ரோடுகளை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்கள்:போக்குவரத்து நெருக்கடியில் சிவகாசி மக்கள்
சிவகாசி:சிவகாசி நகரில் முக்கிய ரோடுகளில் கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன. சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தவிர டூவீலர்கள் ,கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்நிலையில் நகரில் பெரும்பான்மையான முக்கிய ரோடுகள், பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவது பெரிதும் சிரமமாக உள்ளது.
நகரில் கீழ ரத வீதி, புது ரோடு, என்.ஆர்.கே.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பஜார்களில் ஆக்கிரமிப்பினால் ரோடு மிகவும் குறுகலாகிவிட்டது. இந்த ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் திருத்தங்கல் ரோடு, விளாம்பட்டி ரோடு, பைபாஸ் ரோடு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரக் கடைகளால் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கிய நிலையில் டூ வீலர்கள் , கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மாலையில், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்கின்ற மாணவர்கள், பல்வேறு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
முத்துராஜ், டிரைவர், நகரில் பெரும்பான்மையான ரோடுகள் குறுகலாகவே உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருமூர்த்தி ராஜா, கார் கேரேஜ், நகரில் கடைகளின் ஆக்கிரமிப்புகள் தவிர டூவீலர் உள்ளிட்ட கார்கள் ரோட்டிலேயே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் நிரந்தர தீர்வு இல்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் போலீசார் இணைந்து இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு : மாநகராட்சி சார்பில் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வது தொடர் கதையாகவே உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்வதை அகற்ற முடியும்.
மேலும்
-
அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்!
-
என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் மோடி; மேற்குவங்க படகோட்டி பெருமிதம்
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
-
வீடு கட்டுவதை ஒத்திப்போடுவதால் செலவு அதிகரிக்கும்!
-
சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?