கேரட், பீன்ஸ் விலையில் உயர்வு உயராமல் ஒரே நிலையில் கிழங்கு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து விற்பனையானது. அதே சமயம், ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை பல மாதங்களாக எதிர்பார்க்கும் அளவு உயராமல் விற்பனை ஆகி வருகின்றன.

மேட்டுப்பாளையம் - அன்னுார் சாலையில், மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. கேரட், பீன்ஸ் உட்பட காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு, இந்த காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம், ஊட்டி கேரட், பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகி வந்தது. விலையில் பெரிய மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை ஆகி வந்ததால், விவசாயிகள் சோகம் அடைந்தனர். இதனிடையே, சில நாட்களாக கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து வருகிறது.

மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட், காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-

ஊட்டி கேரட், பீன்ஸ் மற்றும் மலைக்காய்கறிகளுக்கு என்றுமே மவுசு உள்ளது. இதற்கு சுவையும், காய்கறிகளின் நிறமும் ஒரு முக்கிய காரணம். கடந்த 14ம் தேதி முதல் கேரட், பீன்ஸ் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரையும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரையும், பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.55 வரையும் விற்பனை ஆயின. காய்கறிகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்து விற்பனை ஆனது. கோடைகாலம் என்பதால், வரத்து நாளுக்கு நாள் குறையும். வரும் நாட்களில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது. இன்று (நேற்று) சுமார் 55 சதவீதம் தான் காய்கறிகள் வரத்து வந்தது.

இவ்வாறு, அவர் கூறினார்.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாகவே, உருளைக்கிழங்குகள் விலை வீழ்ச்சியை நோக்கி தான் செல்கிறது. நேற்று, உருளைக்கிழங்குகள் அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,500க்கு விற்பனை ஆனது. 500 மூட்டைகள் லோடு வந்தன. 3 மாதங்களுக்கு முன் ஒரு மூட்டை ரூ.2,000த்திற்கும் மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Advertisement