'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'

புதுடில்லி: எதிர்பாராத மழையால் பயிர் சேதம் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவும் வலுவாகவும் உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் மொத்த கோதுமை உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. உள்ளூர் அளவில் ஏற்பட்ட மழை சேதங்களை சமாளிக்கும் திறன் வேளாண் துறைக்கு உள்ளது. தற்போதைய கோதுமை பருவத்தின் நிலவரம் கலவையாக இருந்தாலும் உற்பத்தி வலுவாகவே உள்ளது. காலநிலை மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சிறந்த செயல்முறைகளை கடைபிடித்து விவசாயிகள் சமாளித்து வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கோதுமை அரைக்கும் ஆலை உரிமையாளர்களின் சங்கமான, 'ரோலர் பிளவர் மில்லர்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' நடப்பு சீசனில், கோதுமை உற்பத்தி 11 கோடி டன்னாக இருக்கும் என கணித்துள்ளது. மழைக்கு முன்பாக மத்திய வேளாண் அமைச்சகம் 12 கோடி டன் என கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், உணவு துறை செயலர் 11 - 12 கோடியாக இருக்கும் என அண்மையில் தெரிவித்திருந்தார்.

Advertisement