ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
புதுடில்லி: ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் முதலீடு செய்யும் நிதியங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 'பண்டு ஆப் பண்டு' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, மத்திய அரசு வழங்கும் நிதியை குறிப்பிட்ட மாற்று முதலீட்டு நிதியங்கள், புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும்.
அவ்வகையில் இத்திட்டத்தின் 2வது கட்ட செயல்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.
அதன்படி, செபியில் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதியங்கள் (பிரிவு 1 மற்றும் 2) டி.பி.ஐ.ஐ.டி., எனும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையிடம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்.
இதன்வாயிலாக, முதலீடுகள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், தனியார் முதலீடுகளும் அதிகரிக்கும். மேலும் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கும்.
ஆரம்பகட்டமாக இத்திட்டத்தை 'சிட்பி' எனும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி செயல்படுத்தி கண்காணிக்கும். இதுதவிர, டி.பி.ஐ.ஐ.டி., துறையும் இத்திட்டத்தை மேம்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக கூடுதலாக ஒரு கண்காணிப்பு முகமையை சேர்க்கும்.
ஆழ் தொழில்நுட்ப நிறுவனங்கள், துவக்க நிலையில் உள்ள சிறிய ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் சிறிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள், புதுமையும் தொழில்நுட்பமும் இணைந்த உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதியங்கள், எல்லா துறைகளிலும் உள்ள புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் நிதியங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சகம் கூறியுள்ளது.