பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு

2

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள், ஊழியர்களுக்கான 13வது இருதரப்பு ஊதிய உயர்வு பேச்சுகளை விரைவில் துவங்கி, அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அடுத்த ஊதிய உயர்வு 2027 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி, இருதரப்பும் ஏற்கும் வகையிலான சுமுகமான ஊதிய ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் ஒப்பந்தங்களை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை தவிர்க்கவும், தொழில்துறையில் சுமுக நிலையை பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வரவிருக்கும் ஊதிய உயர்வுக்கான பேச்சுகளை துவங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச்சேவைகள் துறை கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுறுத்திஉள்ளது.

Advertisement