அ.தி.மு.க, வேட்பாளரால் விரட்டி பிடிக்கப்பட்ட கார் ஒப்படைப்பு

விருத்தாசலம்: புவனகிரி வேட்பாளரால் விரட்டிப் பிடித்து ஒப்படைக்கப்பட்ட கார், ஒப்படைக்கப்பட்டதால் அ.தி.மு.க.,வினர் அதிருப்தியடைந்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன். இவர், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நாளன்று, கம்மாபுரம் ஒன்றிய ஓட்டுச்சாவடி பகுதிக்கு வந்தார். அப்போது, தேர்தல் அவசரம், போலீஸ் ஆகிய ஸ்டிக்கர்களுடன் உலா வந்த காரை மடக்கிப் பிடிக்க முயன்றார்.

கார் நிற்காமல் சென்ற நிலையில், விருத்தாசலம் தொகுதி, பூதாமூர் பஸ் நிறுத்தம் அருகே மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அப்போது, அருண்மொழிதேவன், 'ஓட்டுச்சாவடி வரை அத்துமீறி நுழைந்த காரில், ஊர்க்காவல்படை அதிகாரி அம்ஜத்கான் என்பவர் சட்டவிரோதமாக ஒவ்வொரு பூத்திலும் எதையோ வினியோகம் செய்தார். அவர், தி.மு.க., வேட்பாளர் ஒருவரின் பினாமி' என தெரிவித்தார்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், காரை பறிமுதல் செய்தனர். ஆனால், அன்று இரவு 7:00 மணிக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கார் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தால், விருத்தாசலம், புவனகிரி தொகுதி அ.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அ அருண்மொழிதேவன் கூறுகையில், 'இந்த சம்பவத்தை விட மாட்டோம். போலீசார் எப்படி காரை ஒப்படைத்தனர் என தெரியவில்லை. சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்' என்றார்.

Advertisement