வழக்கமான ஓட்டுப்பதிவுதான்; வியப்படைய ஒன்றும் கிடையாது: கண்டுபிடித்தார் திருமா

33


சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடந்தது வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.


இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: வழக்கமான ஓட்டுப்பதிவு தான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. எஸ்ஐஆர் மூலமாக ஏராளமான, லட்சக்கணக்கான ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த ஓட்டுகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து இந்த ஓட்டுப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே ஓட்டுப்பதிவு நடந்து இருக்கிறது என்று தான் பேசியிருப்போம்.

எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், இப்பொழுது கூடுதலாக ஓட்டுப்பதிவு நடந்து இருப்பது போல் தோற்றம் இருக்கிறது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாக்காளர்கள் 20 முதல் 25 லட்சம் பேர் இணைவார்கள். அதேபோல் இந்த தேர்தலிலும் 20 முதல் 25 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள், அவ்வளவு தான்.இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்.



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தில் இருந்து இதை நாங்கள் உணர்கிறோம். தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்று சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் வாங்கும் ஓட்டு சதவீதத்தை பொறுத்து தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன். அவ்வளவு தான், தேர்தல் முடிவு வரட்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement