அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தி.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தொகுதியில், மாரிமுத்து என்ற அ.தி.மு.க., தொண்டர், மாற்றுத்திறனாளி மகனுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அவரது வாகனத்தின் மீது, தி.மு.க., ஒன்றிய செயலர் கதிர்வேல் என்பவர் கொலைவெறியுடன் மோதியுள்ளார். இதில் மாரிமுத்துவும், அவரது மகனும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த அருண், ஜெகநாதன், தங்கராஜ் ஆகியோர், படுகாயமுற்ற இருவரையும் மீட்டு, வாகனம் வாயிலாக மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளனர். அந்த வாகனத்தையும் தி.மு.க.,வினர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் இதயாத் என்பவரையும் தி.மு.க., வினர் தாக்கியுள்ளனர்.

ஆட்சி முடியும் நேரத்தில் கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க.,வினர் செய்யும் அடாத செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

எனவே, காவல் துறை தலைமை இயக்குநர், தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement