காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது பீர் பாட்டில் வீசிய மூவர் கைது

தொண்டாமுத்தூர்: சுண்டக்காமுத்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது பீர் பாட்டில் வீசி தாக்கிய, மூவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுண்டக்காமுத்தூர், சின்னசாமி பண்டாரம் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன், 50; காங்கிரஸ் கட்சி நிர்வாகி. மாநகராட்சி, 89வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். சுண்டக்காமுத்தூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள இவருக்கு சொந்தமான கட்டடத்தில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு, 31 என்பவருக்கும் முன்பகை உள்ளது. நேற்று முன்தினம் பகல் 1:00 மணிக்கு, மாதம்பட்டியில் உள்ள மதுபான பாரில், முருகேசன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அவருக்கு அருகே இருந்த டேபிளில் விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில், முருகேசனுக்கும், விஷ்ணு மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

முருகேசன், விஷ்ணுவிடம் தைரியமிருந்தால் எனது அலுவலகத்திற்கு வா என கூறிச் சென்றார். விஷ்ணுவும் நண்பர்களும் அங்கு சென்றனர். அங்கு யாருமில்லாததால், பீர் பாட்டில்களை கட்சி அலுவலகத்தின் மீது எறிந்தனர்.

இதில், அலுவலகத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, 31, செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்த பூபதி, 31, சந்துரு, 21 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆலாந்துறையை சேர்ந்த கவுதம், 30, போத்தனூரைச் சேர்ந்த கார்த்தி, 28 ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement