தி.மு.க.,மீது கடும் அதிருப்தி :'விசிலடித்த' ஓய்வூதியர்கள்
கோவை: 2021 சட்டசபை தேர்தலில் ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில், ஒன்றைக்கூட தி.மு.க., நிறைவேற்றாததால் ஓய்வூதியர்கள் தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடவில்லை. பலர் த.வெ.க.,வுக்கு ஓட்டுப்போட்டது தெரிய வந்துள்ளது.
ஓய்வூதியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒரே பிரதான கோரிக்கை, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே. தி.மு.க., அரசு புதிய பென்ஷன் திட்டத்தை அறிவித்து பழைய பென்ஷன் திட்டத்தை நீர்த்து போக வைத்துள்ளது.
70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்படும் என, அறிவித்திருந்தனர்; அதையும் நிறைவேற்றவில்லை. அதனால் இம்முறை பென்ஷனர்கள், அரசு ஊழியர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடவில்லை.
விஜய் கட்சிக்கு பலர் போட்டுள்ளனர். கடந்த முறை தி.மு.க., வுக்கு ஓட்டுப்போட்டவர்கள் கூட, இம்முறை போடவில்லை. அரசு ஊழியர்களும் இந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டு போடவில்லை. இதன் தாக்கம் தபால் ஓட்டில் தெரிந்து விடும்' என்றார்.