பள்ளிகள் அங்கீகாரத்துக்கு கைமாறிய பல கோடி ரூபாய்!

3

'' தன் பேச்சை கேட்காதவாளுக்கு, 'கல்தா' தர முடிவு எடுத்திருக்கார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபை தொகுதியை, தி.மு.க.,வில் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கிடறா... இதனால, அந்த தொகுதியின், தி.மு.க.,வினர் விரக்தியில் இருந்தா ஓய்...

''இதனால, இங்க ரெண்டாவது முறையா போட்டியிட்ட, மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமதுக்கு, பிரசாரத்தில், தி.மு.க.,வினர் சரியான ஒத்துழைப்பு தரல... இதை கேள்விப்பட்ட, திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான மகேஷ், மணப்பாறை கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு பேசியிருக்கார் ஓய்...

''அப்ப, 'நம்ம ஆட்சியில் எல்லாரும் பலன் அடைஞ்சுருக்கீங்க... அதை நினைச்சு பார்த்து, கூட்டணி வேட்பாளருக்கு ஒத்துழைப்பு குடுங்க'ன்னு அறிவுறுத்தி அனுப்பி இருக்கார்... ஆனா பல நிர்வாகிகள், அதை காதுலயே போட்டுக்கல ஓய்...

''அதோட, பல இடங்கள்ல வாக்காளர்களுக்கு கம்மியா பணம் குடுத்ததும் இல்லாம, சில இடங்கள்ல குடுக்காம பதுக்கிட்டதாகவும் புகார்கள் எழுந்திருக்கு... இதனால, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், அந்த நிர்வாகிகளுக்கு, கல்தா குடுக்க, அமைச்சர் முடிவு பண்ணியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பலவிதமான நெருக்கடியால இறந்து போயிட்டதா சொல்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னை, பூந்தமல்லி தெற்கு பிரிவு மின் வாரிய அலுவலகத்தில், மின் பாதை ஆய்வாளரா இருந்தவர் கணேசன்... இவர், போன, 21ம் தேதி, திடீர்னு அலுவலகத்துலயே மயங்கி விழுந்து இறந்து போயிட்டாரு பா...

''அங்குள்ள அதிகாரிகள், அவருக்கு கூடுதல் வேலை கொடுத்திருக்காங்க... அவருக்கு உதவியா ஊழியர்களையும் அனுப்பாம, தனியாகவே வேலை செய்ய விட்டிருக்காங்க பா...

''இதனால, கடும் மன அழுத்தம் ஏற்பட்டு, அவர் உயிரிழந்துட்டதா, பணியாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியிருக்காங்க... 'இது சம்பந்தமா, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னும் கேட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கோடிக்கணக்கில் வசூல் பண்ணிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எதுக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''தனியார் பள்ளிகளுக்கு வாழ்நாள் அங்கீகாரம் அல்லது, 20 வருஷங்களுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு வழங்கணும்னு, பள்ளி உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை வச்சுட்டே இருந்தாங்க...

''தேர்தலுக்கு முன்னாடி, இதை பரிசீலனை செஞ்ச துறையின் முக்கிய புள்ளி, 'அப்படி உத்தரவு போடணும்னா கவனிக்கணும்... தேர்தல் செலவெல்லாம் இருக்குல்ல'ன்னு சொல்லிட்டாருங்க...

''உடனே, முக்கிய புள்ளிக்கு சில கோடி ரூபாய் கைமாறியிருக்கு... அதே போல, பள்ளிகளை தரம் உயர்த்தும் உத்தரவு போடவும், பல கோடி ரூபாயை வசூல் பண்ணிட்டாருங்க...

''அப்புறமா, முறையா அங்கீகாரம் பெற்று, விதிகளை சரியாக பின்பற்றும் பள்ளிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் உத்தரவை பிறப்பிச்சிட்டு தான், முக்கிய புள்ளி தேர்தல் களத்துக்கு போயிருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''சரி, மகேஷ்... நாளைக்கு பார்க்கலாம் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement