'டவுட்' தனபாலு

2

மயிலம் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம்: நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'என் மகனை தமிழகத்துக்கு தத்து கொடுத்து விட்டேன்' என கூறியுள்ளார். அவருக்கு பிள்ளையை ஒழுங்காக வளர்க்க கூட துப்பில்லை.

டவுட் தனபாலு: அது சரி... எப்பவும், ஏடாகூடமா பேசுறதே உங்களுக்கு வழக்கமா போயிடுச்சு... தேர்தல் முடிவுகள் வரும் போது, விஜய் கட்சியால உங்க வெற்றிக்கு பாதிப்பு வந்திருந்தால், உங்களது இந்த பேச்சுக்கு, த.வெ.க.,வினர் வட்டியும், முதலுமாக பதிலடி தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: சமீபத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சென்று, தேர்தல் பிரசாரம் செய்தேன். அப்போது, அங்கிருக்கும் மக்கள் மனநிலையை அறிந்து கொண்டேன். அதோடு, கட்சியினர் மற்றும் பல தரப்பு மக்களிடம் இருந்தும் கருத்துகளை அறிந்து கொண்ட வகையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காங்கிரசின் வெற்றி, இரட்டை இலக்கத்தை கூட தொடாது; ஒற்றை இலக்கத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். காங்கிரசோடு கூட்டணியாக இருப்பதாலேயே, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும், தி.மு.க.,வும் இம்முறை தோல்வி அடையப் போகிறது.

டவுட் தனபாலு: அடடா... இவர் சொல்றதை பார்த்தால், த.வெ.க., பக்கம் போறேன்னு போக்கு காட்டிய காங்கிரசை, 'அப்படியே போங்க'ன்னு விட்டு தள்ளாம, இழுத்து பிடிச்சு கூட்டணியில் தக்க வச்சது தப்போன்னு, தேர்தல் முடிவுகளை பார்த்து, தி.மு.க.,வினர் வருத்தப்படும் சூழல் வந்துடுமோ என்ற, 'டவுட்' வருதே!


பத்திரிகை செய்தி: 'அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள் அனைத்தையும் ஜெயித்து கொடுத்தால் மட்டுமே, அமைச்சர் பதவி வழங்கப்படும்' என, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களிடம், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: பரவாயில்லையே... அ.தி.மு.க., கூட்டணி வெற்றி மீது பழனிசாமி, அந்த அளவுக்கு நம்பிக்கையா இருக்காரா... அவரது இந்த அசாத்திய நம்பிக்கையை பார்த்தால், பதவியேற்பு விழாவுக்கும், இப்பவே நாள் குறிச்சிட்டு இருப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

Advertisement