மதுரையில் எக்ஸ்பிரஸ் - பாசஞ்சர் ரயில்களுக்கு இடையே  'கனெக் ஷன்' கொடுத்தா 'கலெக் ஷன்' : நேரடி ரயில் சேவை இல்லாத ஊர்களுக்கு இணைப்பு வசதி

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், சிறு நேர மாற்றங்களுடன் எக்ஸ்பிரஸ் - பாசஞ்சர் ரயில்களுக்கு இடையே இணைப்பு வழங்குவதன் மூலம், நேரடி ரயில் சேவை இல்லாத ஊர்களைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பயன்பெறுவர்.

மதுரைக் கோட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் இருந்து ஓசூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கல்வி, பணி நிமித்தமாக பலர் வசிக்கின்றனர். அவர்கள் சொந்த ஊர் வந்து செல்லும் வகையில், பெங்களூருவுக்கு நேரடி ரயில் வசதி, சென்னை செல்ல பகல்நேர ரயில் வசதி இல்லை. இணைப்பு ரயில் வசதியும் இல்லாததால் மதுரை வரை ரயிலில் வந்து, பின் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்திச் செல்லும் நிலை உள்ளது.

மைசூரு - துாத்துக்குடி ரயில் தினமும் காலை 7:25 மணிக்கு மதுரை வருகிறது. அதே நேரம் மதுரையில் இருந்து செங்கோட்டை பாசஞ்சர் புறப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு மதியம் 12:00 மணிக்கு 'தேஜஸ்' ரயில் வருகிறது. காலை 11:35 மணிக்கு ராஜபாளையம் வழியாக குருவாயூர் ரயில் புறப்படுகிறது. இதேபோல், செங்கோட்டையில் இருந்து பாசஞ்சர் ரயில் மதியம் 3:40 மணிக்கு மதுரை வருகிறது. மதியம் 3:30 மணிக்கு தேஜஸ் ரயில் சென்னை புறப்பட்டு செல்கிறது. இதனால் இணைப்பு வசதி கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

தீர்வு என்ன /

காலை 7:25 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை பாசஞ்சரை 15 நிமிடம் தாமதமாக இயக்கினால் பெங்களூருவில் இருந்து ராஜபாளையம், தென்காசி பகுதிகளுக்கு இணைப்பு ரயில் வசதி கிடைக்கும். மதுரை வரும் தேஜஸ் அதிவிரைவு ரயிலை 20 நிமிடம் முன்னதாக மதுரை வரும் வகையிலும், அதற்கேற்றார் போல் மதுரை - குருவாயூர் ரயிலை தாமதமாக இயக்க வேண்டும்.

அதேபோன்று, மதியம் 3:30 மணிக்கு சென்னை புறப்படும் தேஜஸ் ரயிலை 20 நிமிடம் தாமதமாக 3:50 மணிக்கு இயக்கினால் ராஜபாளையம், தென்காசி பகுதிகளில் இருந்து சென்னைக்கு பகல் நேர இணைப்பு ரயில் வசதி கிடைக்கும்.

இவ்வகையில், 15 முதல் 20 நிமிடம் வரை நேர மாற்றம் செய்து மதுரையில் எக்ஸ்பிரஸ் - பாசஞ்சர் ரயில்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தினால், பயணிகளுக்கு 'இணைப்பு' ரயில் வசதி கிடைப்பதுடன் 'வருமானம்' பெருகும். கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.

Advertisement