ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

8

தமிழகத்தில் கடந்த, 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தி.மு.க., - அதி.மு.க., கூட்டணிகள், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி நிலவிய இத்தேர்தலில், 85.10 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது, 2021 தேர்தலை விட, 12.37 சதவீதம் அதிகம். அதேநேரத்தில், 2024 லோக்சபா தேர்தலை விட, 51 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.

தமிழகத்தின், 20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 51 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவானது ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. ஏனெனில், 2011 சட்டசபை தேர்தலில், அதற்கு முந்தைய, 2009 லோக்சபா தேர்தலை விட, 63.65 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகின. அதனால், தற்போது கூடுதலாக பதிவான ஓட்டுகள் என்பது, 2011 உடன் ஒப்பிடுகையில், இரண்டாவது இடம் தான்.

அதாவது, 2011 சட்டசபை தேர்தலில், 3.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்து, 78 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதன்பின், 2016 தேர்தலில், 4.35 கோடி பேர் ஓட்டளித்து, 70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அவற்றுடன் தற்போதைய சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், மாநிலம் இதுவரை கண்டிராத வகையில், 85.10 சதவீத ஓட்டுகள் பதிவாக இருப்பது தெரிகிறது.

'மாநிலத்தில் நல்லாட்சியை உருவாக்கவே, மக்கள் இந்த அளவுக்கு முன்வந்து ஓட்டளித்துள்ளனர்' என்று, ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இந்த தேர்தலில் களமிறங்கியதும், அவரது ரசிகர்களாக உள்ள இளைஞர்கள் பெருமளவில் முன்வந்து ஓட்டளித்ததுமே, ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்றும் கருதப்படுகிறது.

அத்துடன், தற்போதைய ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தாராளமாக வழங்கியதும் ஓட்டுப்பதிவு அதிகரிக்க காரணமாகும்.

மேலும், இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், புதிதாக சில லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் முதல் முறையாக ஓட்டு போடும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்ததும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம்.

அதே நேரத்தில், கூடுதலாக பதிவான ஓட்டுகள், எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையும், எந்த கட்சிக்கு பாதகமாக அமையும் என்ற விவாதங்களும் தலைதுாக்கியுள்ளன. அதற்கான உதாரணமாக, 2006 சட்டசபை தேர்தல் சுட்டிக் காட்டப்படுகிறது.

அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.மு.க.,வும் தனியாக களம் கண்டது. அந்தக் கட்சி, 8.38 சதவீத ஓட்டுகளை அப்போது பெற்றாலும், 32.64 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்த அ.தி.மு.க., தோல்வி அடையவும், 26.46 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்த தி.மு.க., 96 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கவும் காரணமாக இருந்தது.

அதாவது, தே.மு.தி.க., ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான ஓட்டுகளை பிரித்ததே, அ.தி.மு.க.,வின் தோல்விக்கான காரணமாக அமைந்தது. அதேபோன்ற நிலைமை, தற்போதைய தேர்தலில் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.

தேர்தல் பிரசார நேரத்தில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு தன்னெழுச்சியாக கூடிய கூட்டத்தை வைத்து, இப்போதைக்கு எதுவும் சொல் முடியாது. ஏனெனில், அவர் ஒரு நடிகர் என்பதால் தான், கூட்டம் கூடியதா அல்லது ஆதரவு தெரிவித்த கூட்டமா என்பது, தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும். எது எப்படியோ, விஜயின் வரவால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளின் ஓட்டுகள் சிதறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அப்படி ஓட்டுகள் பிரிந்திருந்தால், பல வேட்பாளர்கள், சில நுாறு அல்லது ஆயிரம் ஓட்டுகளில் தான் வெற்றி, தோல்வியை சந்திக்க நேரிடும். விஜயின் வருகை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது, மே, 4ல் தெரிந்து விடும். அதே நேரத்தில், ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி.

Advertisement