ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
கோவை: தேர்தல் பிரசாரத்தில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் பிரசாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 வரை ஓய்வெடுக்க நேரம் கிடைத்துள்ளது. இதனால் பிரசார களத்தில் பரபரப்பாக இருந்த முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கிறார்.
நம் கோவை வேட்பாளர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என விசாரித்தோம்!
பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன்
எனக்காக தேர்தல் பணி செய்த கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை சந்தித்து நன்றி கூறினேன். ஓட்டுப்பதிவு குறித்து தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் ஆய்வு செய்துள்ளேன். பிரசாரத்தின்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தேன். மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க சொல்லியுள்ளனர். அடுத்த ஒரு வாரம் ஓய்வில் இருக்க போகிறேன். குடும்பத்துடன் வெளியூர் வந்துள்ளோம். முக்கிய மீட்டிங்குகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்வேன்.
தி.மு.க. வேட்பாளர் செந்தமிழ்செல்வன்
ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து எங்களின் பூத் ஏஜென்ட்கள், நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தேன். ஓட்டுப்பதிவு குறித்து ஆலோசனை செய்து, தேர்தல் பணியாற்றியவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளோம். இன்று தான் (நேற்று) வீட்டில் ஓய்வெடுக்கிறேன். திருமண நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் செல்லவுள்ளேன். அப்படியே குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று வர திட்டமிட்டுள்ளேன்.
அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி
தேர்தல் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். தேர்தல் பணி காரணமாக தொகுதியில் நடைபெற்ற சுப, துக்க நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அங்கெல்லாம் சென்று விசாரித்து வருகிறேன். அப்படியே நேரம் சென்றுவிடுகிறது. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதே ஊட்டி எல்லாம் சென்று தங்கியதில்லை. இப்போதும் அங்கு எல்லாம் செல்ல திட்டமில்லை. ஓட்டு எண்ணிக்கைக்குள் பண்ணாரி அம்மன், எங்கள் குல தெய்வம் உள்ளிட்ட சில கோயில்களுக்கு மட்டும் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்
தேர்தல் முடிந்த அடுத்த நாள் தொகுதி ஓட்டுப்பதிவு நிலவரத்தை ஆய்வு செய்து, நிர்வாகிகளுக்கு நன்றி கூறினேன். மாவட்ட செயலராகவும் உள்ளதால் என் கட்டுப்பாட்டில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி நிலவரங்களை ஆய்வு செய்து வந்துள்ளேன். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் 2 பேர் சாலை விபத்தில் இறந்துவிட்டனர். அந்த துக்க நிகழ்வில் இருக்கிறேன். ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள ஜி.சி.டி. சென்று வந்தேன். ஓட்டு எண்ணிக்கைக்கான ஏஜென்ட்கள் நியமிக்கும் பணி உள்ளது. ஓய்வெடுக்கும் திட்டம் இல்லை.
அ.தி.மு.க. வேட்பாளர் தாமோதரன்
நான் எப்போதுமே தொகுதி மக்களுடன் தான் இருப்பேன். ஓய்வுக்காக வெளியில் செல்ல மாட்டேன். மிகவும் சோர்வாக இருந்ததால், ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்தநாள் வீட்டில் ஓய்வெடுத்தேன். அதுவே போதும். நான் சாதாரண விவசாயி. பெரிதாக சுகத்தை எதிர்பார்க்க மாட்டேன். எனக்காக எங்கள் கட்சியினர், தோழமை கட்சியினர் வெயிலில் உழைத்துள்ளனர். அவர்களை விட்டு நான் எங்கே செல்ல முடியும். தொகுதிக்குள் சுப, துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஓட்டு எண்ணிக்கைக்கான பணியை செய்கிறேன்.
தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன்
ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு ஜி.சி.டி. சென்று ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள அறையை சீல் வைக்கும் பணி இருந்தது. அங்கு கட்சி சார்பில் கண்காணிப்பு பணிகளை ஏற்பாடு செய்து, ஓட்டு எண்ணிக்கைக்கான ஏஜென்ட்களை நியமித்து, தொகுதி நிலவரம் குறித்து நிர்வாகிகள், பூத் ஏஜென்ட்களிடம் ஆய்வு செய்துள்ளோம். குடும்பத்தினருடன் வெளியூர் வந்துள்ளேன். செவ்வாய் முதல் ஓட்டு எண்ணிக்கை பணிகளுக்கு தயாராவோம்.
அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் தொகுதி நிலவரம் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தேன். ஓட்டு எண்ணிக்கைக்கான ஏஜென்ட்களை நியமித்தோம். என் பேரனுக்கு மொட்டை அடிப்பதற்காக குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வந்துள்ளேன். ஓய்வு எடுப்பதற்கு நான் என்ன மண் வெட்டி எடுத்தா பணியாற்றினேன். எனக்கு ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பழக்கம் எல்லாம் இல்லை. கட்சி அலுவலகம் சென்று தொண்டர்களை பார்த்தாலே போதும்.
ரொம்ப முக்கியம். என்ன பண்ணினாள் என்ன யாருக்கு அதனால் லாபம்?
இவர்கள் MLA ஆன பிறகு 5 வருடம் ஓய்வுதானே எடுக்க போகிறார்கள்?
யார் யாருக்கு மக்கள் நடுவிரல் காட்டப் போறாங்களோ தெரியலை.
போட்ட மேக்கப்பை கலைத்து கொண்டிருப்பார்கள். ஆள் அடையாளம் தெரியாது.