ஒருமுனை மின்சாரத்தால் சிகிச்சைகள் தாமதம்

சோழவந்தான்: 'விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது: இங்கு 'பஸ் ஸ்டாண்ட்' அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. பழைய கட்டடம் சேதமடைந்ததால் ஆறுமாதங்களுக்கு முன்பாக ரூ.1.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டடத்திற்கு இன்றுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் பழைய கட்டடத்தின் ஒருமுனை (சிங்கிள் பேஸ்) இணைப்பைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது. இருமுறை மின்பழு தாங்காமல் ஒயர்கள், மின்போர்டு எரிந்து சேதமடைந்துள்ளன. சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

மும்முனை மின்இணைப்பு இல்லாததால் 5 குளிர்சாதனப் பெட்டிகளில் ஒன்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் போதிய அளவில் நாய்க்கடி, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை இருப்பு வைக்க முடிவதில்லை. இதனால் அருகே செல்லம்பட்டிக்குச் சென்று தடுப்பூசிகளை பெற்றுவரும் நிலை உள்ளது. இதற்காக பல மணி நேரம் பாதிக்கப்பட்டோர் காத்திருக்கின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மின் இணைப்பு பெறுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் சரி செய்யப்படும்'' என்றனர்.

Advertisement