'சூப்பர் ஓவரில்' கொல்கட்டா வெற்றி: லக்னோ அணிக்கு அதிர்ச்சி
லக்னோ: விறுவிறுப்பான லீக் போட்டியில், கொல்கட்டா அணி 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
லக்னோவில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, கொல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மொசின் அசத்தல்: கொல்கட்டா அணிக்கு மொசின் கான் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' டிம் செய்பர்ட் (0), கேப்டன் அஜின்கியா ரஹானே (10) வெளியேறினர். பிரின்ஸ் யாதவ் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய அங்கிரிஷ் ரகுவன்ஷி (9), 'அப்ஸ்டிரக்டிங் தி பீல்டு' விதிப்படி ஆட்டமிழந்தார். மொசின் கான் 'வேகத்தில்' ராவ்மன் பாவெல் (1), கிரீன் (34), அனுகுல் ராய் (0) வெளியேறினர்.
ரிங்கு அரைசதம்: கொல்கட்டா அணி 15 ஓவரில் 93/7 ரன் எடுத்து திணறியது. ஷமி வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்த ரிங்கு சிங், திக்வேஷ் ரதி வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 4 சிக்சர் பறக்கவிட்டார்.கொல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (83), சுனில் நரைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். லக்னோ அணி சார்பில் மொசின் கான் 5 விக்கெட் கைப்பற்றினார்.
பன்ட் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மார்ஷ் (2) ஏமாற்றினார். பின் இணைந்த மார்க்ரம் (31), கேப்டன் ரிஷாப் பன்ட் (42) ஜோடி நம்பிக்கை தந்தது. நிக்கோலஸ் பூரன் (9), முகுல் சவுத்ரி (1), லிண்டே (8) சோபிக்கவில்லை. ஆயுஷ் படோனி (24) ஆறுதல் தந்தார்.
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. கார்த்திக் தியாகி பந்துவீசினார். முதல் 5 பந்தில் 10 ரன் எடுக்க, கடைசி பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. இதில் ஷமி சிக்சர் விளாச, லக்னோ அணி 20 ஓவரில் 155/8 ரன் எடுத்து. போட்டி 'டை' ஆனது.
சூப்பர் வெற்றி: போட்டியின் முடிவு 'சூப்பர் ஓவருக்கு' சென்றது. இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. கொல்கட்டா சார்பில் சுனில் நரைன் பந்துவீசினார். முதல் பந்தில் பூரன் (0) போல்டானார். இரண்டாவது பந்தில் கேப்பன் ரிஷாப் பன்ட் ஒரு ரன் எடுத்தார்.
மூன்றாவது பந்தில் மார்க்ரம் (0) ஆட்டமிழந்தார். லக்னோ அணி 0.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு ஒரு ரன் எடுத்தது.
பின், 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் கொல்கட்டா களமிறங்கியது. பிரின்ஸ் யாதவ் பந்துவீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங் (4*) வெற்றியை உறுதி செய்தார்.
மூன்று 'மெய்டன்'
ஆட்டத்தின் 4வது ஓவரை லக்னோ அணியின் மொசின் கான் 'மெய்டனாக' வீசினார். இம்முறை, அதிக 'மெய்டன்' ஓவர் (3) வீசிய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் மொசின் கான். ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர், சென்னையின் அகீன் ஹொசைன் தலா ஒரு முறை இப்படி பந்துவீசினர்.
நான்காவது வீரர்
கிரிக்கெட் லீக் அரங்கில், எதிரணி வீரரை அவுட் செய்யவிடாமல் தடுத்த முறையில் (obstructing the field) அவுட்டான 4வது வீரரானார் அங்கிரிஷ் ரகுவன்ஷி. ஏற்கனவே கொல்கட்டாவின் யூசுப் பதான் (2013, எதிர்: புனே), டில்லியின் அமித் மிஸ்ரா (2019, எதிர்: ஐதராபாத்), சென்னையின் ரவிந்திர ஜடேஜா (2024, எதிர்: ராஜஸ்தான்) ஆகியோர் இப்படி அவுட்டாகினர்.
ரகுவன்ஷி அவுட் சர்ச்சை
பிரின்ஸ் யாதவ் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தை தட்டிவிட்ட அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எடுக்க பாதி துாரம் வந்துவிட்டார். ஆனால் எதிர் முனையில் இருந்த கிரீன் வேண்டாம் எனக் கூறினார். மீண்டும் கிரீசை நோக்கி ஓடிய ரகுவன்ஷி, 'டைவ்' அடித்தார். அப்போது பந்தை பெற்ற முகமது ஷமி 'ரன்-அவுட்' செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ரகுவன்ஷி மீது பட்டது. இவர் வேண்டுமென்றே ரன் அவுட் வாய்ப்பை தடுத்ததாக, ஷமி, கேப்டன் ரிஷாப் பன்ட் உள்ளிட்ட லக்னோ அணியினர் 'அப்பீல்' செய்தனர். மூன்றாவது அம்பயர் ரோஹித் பண்டித் இதற்கு 'அப்ஸ்டிரக்டிங் தி பீல்டு' விதிப்படி 'அவுட்' வழங்கினார். ஆடுகள அம்பயரிடம் வாக்குவாதம் செய்த ரகுவன்ஷி, 'பெவிலியனில்' தனது பேட், ஹெல்மெட்டை துாக்கி வீசினார். கொல்கட்டா அணியின் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், 4வது அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.
மூன்றாவது வீரர்
கிரிக்கெட் லீக் தொடரில், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்த 3வது லக்னோ அணி பவுலரானார் மொசின் கான் (5/23). ஏற்கனே மார்க் உட் (5/14, எதிர்: டில்லி, 2023), யாஷ் தாகூர் (5/30, எதிர்: குஜராத், 2024) இப்படி சாதித்தனர்.
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்