சென்னையை வென்ற குஜராத் 'மாடல்': 'செக்' வைத்த சாய் சுதர்சன்

சென்னை: சொந்த மண்ணில் சொதப்பிய சென்னை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரபாடா (3 விக்.,), சாய் சுதர்சன் (87 ரன்) கைகொடுக்க, குஜராத் அணி வென்றது.


வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் (பகலிரவு) சென்னை, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ரபாடா மிரட்டல்: சென்னை அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். ஆடுகளத்தில் பந்துகள் 'பவுன்ஸ்' ஆக, 'வேகப்புயல்' ரபாடா மிரட்டினார். போட்டியின் 4வது ஓவரில் இரட்டை 'ஷாக்' கொடுத்தார். 3வது பந்தில் சஞ்சு சாம்சன் (11), 6வது பந்தில் உர்வில் படேலை (4) அவுட்டாக்கினார். சிராஜ் 'வேகத்தில்' சர்பராஸ் கான் (0) வெளியேறினார். பிரவிஸ் (2) ஏமாற்ற, 9 ஓவரில் 38/4 ரன் எடுத்து தவித்தது.


ருதுராஜ் அரைசதம்: பின் கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே மந்தமாக விளையாட, 12 ஓவரில் தான் 51/4 ரன்னை எட்ட முடிந்தது. அர்ஷத் கான் ஓவரில் ருதுராஜ் 2 சிக்சர் அடித்தார். ரஷித் கான் ஓவரில் துபே (4,6), ருதுராஜ் (ஒரு பவுண்டரி, 5 வைடு) விளாச, மொத்தம் 21 ரன் கிடைத்தன. ஷிவம் துபே, 22 ரன் எடுத்தார். ருதுராஜ், 49 பந்தில், இத்தொடரில் முதல் அரைசதம் எட்டினார். கார்த்திக் சர்மா (15) நிலைக்கவில்லை.


அர்ஷத் கான் ஓவரில் (19வது) 4,6,4,4 என விளாசிய ஓவர்டன் (18) ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 158/7 ரன் எடுத்தது. ருதுராஜ் (74 ரன், 60 பந்து, 6X4, 4X6) அவுட்டாகாமல் இருந்தார்.

தோனி போல சாம்சன்: சுலப இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் நல்ல அடித்தளம் அமைத்தனர். சென்னை பந்துவீச்சு எடுபடாததால், எளிதாக ரன் சேர்த்தனர். 'பவர்பிளே' முடிவில் 55/0 ரன் எட்டியது.

நுார் 'சுழலில்' சுப்மன் (33) தடுமாற, தோனி போல மின்னல் வேகத்தில் 'ஸ்டம்பிங்' செய்து அசத்தினார் சாம்சன்.

அபார ஆட்டத்தை தொடர்ந்த தமிழகத்தின் சுதர்சன், 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஆடுகளத்தை கணித்து, கவனமாக விளையாடிய இவர், மற்ற பேட்டர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.


மறுபக்கம் பட்லரும் அடித்து நொறுக்க, நொந்து போன சென்னை ரசிகர்கள், 14வது ஓவிரிலேயே மைதானத்தைவிட்டு வெளியேற துவங்கினர். அகீல் பந்தை துாக்கி அடித்த சுதர்சன் (87 ரன், 46 பந்து, 4x4, 7x6), பிரவிசின் கலக்கல் 'கேட்ச்சில்' அவுட்டானார். அதே நேரம் அகீல் பந்தை கச்சிதமாக சிக்சருக்கு அனுப்பிய பட்லர், விரைவான வெற்றியை உறுதி செய்தார்.
குஜராத் அணி 16.4 ஓவரில் 162/2 ரன் எடுத்து, சுலப வெற்றி பெற்றது. பட்லர் (39), வாஷிங்டன் சுந்தர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை குஜராத் அணியின் ரபாடா (3/25) வென்றார்.


சாம்சன் 5,000 ரன்

ரபாடா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சாம்சன், கிரிக்கெட் லீக் அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்னை (3,555 பந்து) எட்டிய இந்திய வீரரானார். அடுத்த இடங்களில் ரெய்னா (3620), ராகுல் (3688), தோனி (3691) உள்ளனர்.

* கிரிக்கெட் லீக் வரலாற்றில் அதிவேகமாக 5,000 ரன் எட்டிய மூன்றாவது வீரரானார் சாம்சன். முதலிரண்டு இடங்களில் டிவிலியர்ஸ் (3288), வார்னர் (3554) உள்ளனர்.

* இந்த சீசனில் 'பவர்பிளே'யில் (முதல் 6 ஓவர்) குறைந்த ரன் எடுத்த 2வது அணியானது சென்னை (28/3). முதலிடத்தில் ஐதராபாத் (22/3, எதிர், லக்னோ) உள்ளது.


* இத்தொடரில் 50 ரன்னை எட்ட அதிக ஓவர் (12) எடுத்துக் கொண்ட அணியானது சென்னை. கிரிக்கெட் லீக் அரங்கில் தனது 2வது மந்தமான 50 ரன்னை பதிவு செய்தது. முதலிடத்தில் 12.1 ஓவரில் 50 ரன்னை (எதிர், பெங்களூரு, 2011) எடுத்தது உள்ளது.

ருதுராஜ் 100 'சிக்சர்'

சென்னை அணிக்காக 100+ சிக்சர் அடித்தவர் பட்டியலில் ருதுராஜ் (100 சிக்சர்) நான்காவது இடம் பெற்றார். முதல் 3 இடங்களில் தோனி (234), ரெய்னா (180), ஷிவம் துபே (105) உள்ளனர்.

Advertisement