மேற்கு வங்கம் சென்றனர் தொழிலாளர்கள்: தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு

4

சென்னை: தமிழகத்திலிருந்த மேற்கு வங்க மாநில கட்டுமான தொழிலாளர்கள், அம்மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க சென்றதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், ஏப்., 23, 29 என, இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

தமிழகத்தில் தங்கி கட்டுமான பணி செய்து வந்த, மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள், தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால், தமிழகத்தில் கட்டுமான பணிகள், தற்காலிகமாக பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், கட்டுமான பணிகளில், ஒடிஷா, பீஹார், மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் விழா என்றால், ஒட்டு மொத்தமாக செல்வர். மேற்கு வங்கத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து, தேர்தல் நடத்தப்படுகிறது.

எனவே, வாக்காளர்களாக இருப்போர், இம்முறை கண்டிப்பாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் தங்கி வேலை செய்து வந்த, மேற்கு வங்க கட்டுமான தொழிலாளர்கள், 15 முதல் 30 நாட்கள் வரை விடுப்பு எடுத்து, சொந்த மாநிலத்துக்கு சென்றுள்ளனர். இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் திரும்பி வந்த பின், பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement