கூட்டணி நீடிக்குமா?

'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கூட்டணிக்குள் குழப்பம் துவங்கி விட்டதே...' என ஆச்சரியப்படுகின்றனர், கர்நாடகா மக்கள்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சட்டசபை தேர்தல், வரும், 2028ல் தான் நடக்கவுள்ளது. ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், எதிர்க்கட்சியான, பா.ஜ., மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில், இப்போதே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மீண்டும் முதல்வர் பதவியில் அமர ஆசைப்படுகிறார். இதற்காக, 'சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால், எங்கள் தலைவர் குமாரசாமி தான் முதல்வர்...' என, தன் ஆதரவாளர்களை வைத்து, பேட்டி கொடுக்க துவங்கியுள்ளார்.

இதனால் கடுப்பான, பா.ஜ., தலைவர்கள், 'குமாரசாமிக்கு மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிய விஷயம். இந்த லட்சணத்தில், முதல்வர் பதவியும் கொடுக்க வேண்டுமா...' என, பேசி வருகின்றனர்.

இரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும், இந்த விஷயத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வருவது, கர்நாடகா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், கர்நாடகா மக்களோ, 'தேர்தல் நடந்து, அதில் வெற்றி பெற்ற பிறகு தானே, முதல்வர் பதவி பற்றி பேச வேண்டும். இவர்கள் அதற்குள் மோதலில் ஈடுபடுகின்றனரே. தேர்தல் வரைக்கும் இந்த கூட்டணி தாங்காது போலிருக்கிறதே...' என்கின்றனர்.

Advertisement