கடல்சார் போக்குவரத்தில் அபாயம் ரூ.497 கோடியில் 'ரிலீப்' திட்டம் அமல் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு தீவிரம்
திருப்பூர்: போர் சூழலால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஏதுவாக, 497 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் 'ரிலீப்' திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளிடையே நடக்கும் போர் சூழலால், கடல்சார் போக்குவரத்தில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. வழக்கமான ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமல்லாது, அத்தியாவசிய பொருட்கள் நகர்வும் பாதிக்கப்பட்டது. திடீர் சவால் காரணமாக, கப்பல் போக்குவரத்தில், கட்டணங்கள் உயர்ந்தன. ஏற்றுமதி வர்த்தகத்துக்கான காப்பீடும் உயர்ந்தது.
போர் சூழல் பாதிப்புகளை தணிக்கும் வகையில், மத்திய அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடல்சார் அபாயங்களை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும், 497 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ரிலீப்' என்ற திட்டத்தை, கடந்த மாதம் அறிவித்தது. ஏற்றுமதி மேம்பாட்டு இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம், இ.சி.ஜி.சி., எனப்படும், இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஈராக், ஈரான், கத்தார், ஓமன் நாடுகளுக்கு, கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் கூடுதல் செலவுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். இது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு மிகவும் பயனுள்ளது என கூறுகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், “இத்திட்டத்தில் இ.சி.ஜி.சி., பாலிசிதாரர்களுக்கு, 100 சதவீதம் காப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்படாத குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட உள்ளது” என்றனர்.