கீழடி அருங்காட்சியகத்தை காண ஆயிரம் கி.மீ., பயணம் செய்த தம்பதி

கீழடி:கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண டூவீலரிலேயே ஆயிரம் கி.மீ., பயணம் செய்து தம்பதியினர் வந்திருந்தனர்.

கீழடியில் 24 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்பட்டது. இரண்டு அரங்குகளுடன் அமைக்கப்பட்ட திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் டூவீலரில் வந்திருந்தார்.

ஆனந்த் கூறுகையில்,

ஏற்கனவே ஒருமுறை திறந்த வெளி அருங்காட்சியகம் காண வந்து அனுமதி இல்லாததால் திரும்பி சென்று விட்டேன், வெளி நாட்டில் பணிபுரிகிறேன், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், கோடை விடுமுறை என்பதால் கீழடியை பார்த்து வரலாம் என டூவீலரில் குடும்பத்துடன் கிளம்பினேன். திருச்சியில் இருந்து கேரளாவில் நண்பர் இல்ல விழாவில் பங்கேற்று அங்கிருந்து மதுரை வழியாக கீழடிக்கு டூவீலரில் வந்துள்ளேன், ஆயிரம் கி.மீ., டூவீலரிலேயே பயணம் செய்துள்ளோம், தொல்பொருள் அருங்காட்சியகத்தை விட திறந்த வெளி அருங்காட்சியகம் கவனத்தை ஈர்த்துள்ளது என்றார்.

Advertisement