ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்

கொல்கட்டா: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கொல்கட்டாவில் உள்ள சகாவத் நினைவு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பவானிபூர் சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணும் மையத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென நேரில் சென்றார். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பல இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதை நான் பார்த்திருக்கிறோம். இதைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, நான் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்று நினைத்தேன். நான் வந்தபோது, மத்தியப் பாதுகாப்புப் படையினர் என்னைத் தடுத்தனர். தேர்தல் விதிகளின்படி எனக்கு உள்ளே செல்ல உரிமை உண்டு என்றும், சீல் வைக்கப்பட்ட அறைக்கு வெளியே வரை வேட்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நான் அவர்களிடம் கூறினேன். அதன் பின்னரே நான் அனுமதிக்கப்பட்டேன். ஒருவேளை முறைகேடு ஏதேனும் நடந்திருந்தால், நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, குதிராம் அனுஷீலன் கேந்திரா ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியே திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் குணால் கோஷ் மற்றும் சசி பாஞ்சா ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பறையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மதியம் 3.30 மணி வரை அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் வெளியேறச் சொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் மாலை 4 மணிக்கு பாதுகாப்பறை மீண்டும் திறக்கப்படும் என இமெயில் வந்ததாகவும் குணால் கோஷ் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணைம், "அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குதிராம் அனுஷீலன் கேந்திராவில் உள்ள 7 பாதுகாப்பறைகளும் வேட்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் உறுதிப்படுத்தியது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் காணப்படுவது, தபால் ஓட்டுச் சீட்டுகளை வகைப்படுத்தும் வழக்கமான நடைமுறை. இது சீல் வைக்கப்பட்ட ஓட்டு இயந்திரங்கள் அறைகளுக்கு வெளியே நடைபெற்றது," இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement