லாரன்ஸ் பள்ளி மாணவர்களின் குதிரை சாகசம் பார்வையாளர்கள் வியப்பு

ஊட்டி: ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில், மத்திய மனித வள மேமம்பாட்டு துறையின் கீழ் லாரன்ஸ் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், 168 வது நிறுவனர் தினம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. பள்ளி வளாகத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாணவர்களின் கல்வி, எதிர்கால முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான புத்தக கண்காட்சி நடந்தது. பள்ளி கலையரங்கில் இலக்கியத்தின் பெருமையை உணர்த்தும் வகையில், சிலப்பதிகார கதை நடன, நாடகம் மற்றும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிக்க வைத்தது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், முக்கிய நிகழ்வாக குதிரையேற்ற நிகழ்ச்சியில், 5ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் குதிரைகள் மீதமர்ந்து செய்த சாகசங்கள் மற்றும் உடற் பயிற்சி கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இன்று தமிழக கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். கவர்னர் வருகையை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement