சட்டசபைக்கு மது அருந்தி வந்தாரா பஞ்சாப் முதல்வர்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

11


சண்டிகர்: பஞ்சாபில் நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில், முதல்வர் பக்வந்த் மான் மதுபோதையில் பங்கேற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.


பஞ்சாபில் இருந்து தேர்வான ஆம் ஆத்மி எம்பிக்கள் 8 பேர் பாஜவில் இணைந்தனர். அம்மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பகவந்த் மான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் முதல்வர் பகவந்த் மான் மதுபோதையில் பங்கேற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.


சட்டசபை துவங்கியதும், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், முதல்வர் சட்டசபைக்கு மதுபோதையில் வந்ததாக குற்றம்சாட்டினார்.


எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும். முதல்வருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டு வந்துள்ளது. உண்மையை கண்டறிய அனைத்து எம்எல்ஏக்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.


சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் சட்டசபையில் முதல்வர் குறித்த வீடியோவை வெளியிட்ட தீவிர குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சட்டசபைக்கு போதையில் வந்த பகவந்த் மானின் செயல், வெட்கக்கேடானது. முதல்வரின் நடவடிக்கையை பொது மக்கள் தீவிரமாககண்காணிப்பதுடன், அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். உண்மையை வெளிக் கொண்டுவர பகவந்த் மான், பரிசோதனைக்கு உட்பட வேண்டும் எனக்கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.


பிரச்னை பெரிதானததை தொடர்ந்து பகவந்த் மான் கூறுகையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிட்டு, அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால், மதுபோதை குறித்த குற்றச்சாட்டு குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement