மழை பெய்யாததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அதிகரிப்பு கால்நடை வளர்ப்போர் கடும் சிரமம்

போடி:போடி பகுதியில் மழை பெய்யாததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.



மாவட்டத்தில் சிறு விவசாயிகள், விவசாய கூலிகள், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். பால் மாடுகளை வளர்ப்பதால் பால் உற்பத்தி, மாட்டு கழிவுகளால் விவசாயத்திற்கு இயற்கை உரம் ஆகியவற்றால் லாபகரமான தொழிலாளக இருந்தது. சோளம், மக்காச்சோள தட்டைகள், தீவனமாக பயன்படுத்தி வந்தனர். தோட்டம், வரப்பு, வாய்க்கால் பகுதியில் கிடைக்கும் பச்சை தீவனங்கள் மூலம் பால் மாடுகளை வளர்த்தனர்.

கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் போடி பகுதியில் ஆறு, கண்மாய்கள், தோட்ட கிணறுகள் வறண்டும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளன. இதனால் பச்சை தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மானாவாரியாக பயிடப்படும் நிலக்கடலை மகசூல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. போடி அருகே சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம் தர்மத்துப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் நிலக்கடலை மாற்றாக தக்காளி, துவரை பயிரிட்டு உள்ளனர். மாட்டு தீவனத்திற்கு பயன்படும் கடலை, சோளம் பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குறைந்த அளவில் கால்நடைகளை வளர்த்து வரும் சிறு விவசாயிகள் கால்நடை தீவனத்திற்காக குறைந்தது 3 கி.மீ., தூரம் போடியை சுற்றியுள்ள மலையடிவார பகுதிக்கு சென்று பச்சை தீவனங்களை அறுத்து டூவீலரில் கொண்டு வருகின்றனர். இதனால் கால்நடை வளர்ப்போர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement