கிணற்றில் இறந்து கிடந்த புலி,பன்றி வனத்துறையினர் தீவிர விசாரணை
கூடலுார்: கூடலுார், ஓவேலி அருகே பயனற்று காணப்பட்ட கிணற்றில் ஆண்புலி, காட்டுப்பன்றி இறந்து கிடந்தது தொடர்பாக, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார் ஓவேலி வனச்சரகம் பார்வுட், செல்வபுரம் பகுதியில், பயனற்ற, 10 அடி ஆழமுள்ள கிணற்றில் புலி மற்றும் காட்டுப்பன்றி இறந்து கிடந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
கூடலுார் வன அலுவலர் தேவராஜ், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், ஓவேலி வனச்சரகர் வீரமணி ஆகியோர் இறந்த புலி, பன்றியின் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், ‘ஓவேலி செல்வபுரம் பகுதியில் பயனற்ற 10 அடி ஆழமுள்ள தனியார் கிணற்றில், 8 வயது ஆண் புலி மற்றும் காட்டுப்பன்றி இறந்து கிடந்தன. இவைகள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை விபரம் கிடைத்த பின், இறததற்கான காரணம் தெரியவரும். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியபட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.