அரிசி, கோதுமை, நிலக்கடலையைப் போல கடலைமாவுக்கும் எம்.ஆர்.எல்., நிர்ணயிக்க வேண்டும்: மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
மதுரை:அரிசி, கோதுமை, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) நிர்ணயித்துள்ள, 'குளோர்பைரிபாஸ்' அதிகபட்ச எஞ்சியுள்ள அளவை (எம்.ஆர்.எல்.,) விட கடலைமாவிற்கு அதிகமாக உள்ளது. அதை திருத்தி அமைக்க வேண்டுமென மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆணையத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் தெய்வராஜன் கூறியதாவது:
குளோர்பைரிபாஸ் பூச்சிக்கொல்லி மருந்தானது விவசாய நிலையிலேயே கொண்டைக்கடலையில் (பெங்கால் கிராம்) சேர்கிறது. இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் மீதமுள்ள எஞ்சிய வடிவம். இதை விவசாய பயன்பாட்டிற்கும் பூச்சிகளை அழிக்கவும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. கொண்டைக் கடலையிலிருந்து கடலைமாவு நேரடியாகத் தயாரிக்கப்படுவதால் அதில் எம்.ஆர்.எல்., அளவு அதிகமாக உள்ளது. கடலைமாவு தயாரிப்பு நிலையில் குளோர்பைரிபாஸ் மீதமுள்ள அளவை கட்டுப்படுத்துவதற்கோ, நீக்குவதற்கோ சாத்தியம் இல்லை.
இந்நிலையில் ஆணையத்தின் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கடலைமாவு பாக்கெட்டுகளை விற்பனை கடைகளிலிருந்து எடுத்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். இதில் கடலைமாவில் குளோர்பைரிபாஸ் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி மாவு தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஒவ்வொரு உணவுப்பொருட்களில் காணப்படும் குளோர்பைரிபாஸ் பூச்சிக்கொல்லி மீதமுள்ள அளவுகள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உணவு உட்கொள்ளும் அளவு, பயன்பட்டு தரவு, விஞ்ஞான அடிப்படையிலான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் எம்.ஆர்.எல். அளவு நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகத்தில் மாவு தயாரிப்புத் தொழில்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையை (எம்.எஸ்.எம்.இ.,) சார்ந்துள்ளது. எனவே கொண்டைக் கடலையில் காணப்படும் எஞ்சிய நஞ்சுக்காக கடலைமாவு தயாரிப்பு நிறுவனங்களை தண்டிப்பது நியாயமில்லை.
அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை ஒரு கிலோ அளவிற்கான எம்.ஆர்.எல்., 0.1 மில்லிகிராம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலைமாவுக்கு மட்டும் 0.01 மி.கி என நிர்ணயித்தது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மற்ற விளைபொருட்களுக்கு இணையாக கடலைமாவுக்கும் எம்.ஆர்.எல். அளவை திருத்தி நிர்ணயிக்க வேண்டும் அல்லது கடலைமாவிற்கு சிறப்பு விலக்கு அல்லது தளர்வு வழங்க வேண்டும். இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.