காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு

சென்னை: மதுரையில் நடந்த காது கேளாதோருக்கான மாநில செஸ் போட்டியில், 60க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் செஸ் சங்கம் சார்பில், மாநில அளவில் 12வது ஓபன் டெப் செஸ் போட்டி, மதுரை விசாலாக்ஷிபுரத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., காமக் பள்ளியில் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஆடவர் சீனியர் பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் அலெக்சாண்டர் முதலிடமும், மதுரை அழகுராஜா மற்றும் கன்னியாகுமரி சிவ்பராஜ் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர். ஜூனியர் பிரிவில் ஈரோடு கவுசிக், ஈரோடு கனிஷ் மற்றும் சென்னை கோகுல் முறையே முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர். சப் – ஜூனியரில் ஈரோடு ரித்திக், ரித்திஷ் மற்றும் சென்னையின் மனாவ் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

அதேபோல, பெண்கள் சீனியர் பிரிவில் விருதுநகர் சிவகாமிலட்சுமி ஈரோடு ரத்தினம் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். பெண்கள் ஜூனியர் பிரிவில் ஈரோடு காவியா முதலிடம் பிடித்து அசத்தினார்.

Advertisement