ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
புதுடில்லி: குறைந்தபட்ச ஆதார விலையில், ரபி பருவ கோதுமை கொள்முதல் செய்ய, விதிமுறைகளை டில்லி அரசு தளர்த்திய டில்லி அரசு, மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டு, தரம் குறைந்த கோதுமை கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ரபி பருவ கோதுமையை குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட விதிமுறைப்படி, கோதுமையின் பளபளப்பு 70 சதவீதம் வரை குறைந்திருந்தாலும், சுருங்கிய மற்றும் உடைந்த தானியங்கள் 15 சதவீதம் வரை கலந்திருந்தாலும், கொள்முதல் மையங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த ஆண்டு மோசமான வானிலை காரணமாக அறுவடை காலத்தில் கோதுமை உள்ளிட்ட ரபி பருவ பயிர்கள் பாதிக்கப்பட்டன. எனவே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், விவசாயிகள் கோதுமையை மிகக் குறைந்த விலைக்கு அவசரமாக விற்பதை தடுக்கவும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
டில்லி அரசின் கோரிக்கையை ஏற்று, 2026- - 2027 ரபி பருவ கோதுமை கொள்முதல் நடவடிக்கைகளில், டில்லியின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் தளர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தளர்த்தப்பட்ட விதிமுறைப்படி கொள்முதல் செய்யப்படும் கோதுமை தனியாக கையாளப்படும். முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் இந்த கோதுமை வழக்கமான இருப்பில் வைக்கப்படாமல், தனி இடத்தில் சேமிக்கப்படும். இதற்கென ஒரு தனி கணக்கும் துவக்கப்படும்.
ரபி பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கோதுமைக்கு முன்னுரிமை அளித்து, அதை விரைவாக சந்தைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோதுமையை நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டில்லியின் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ரபி பருவ கோதுமை டில்லிக்குள்ளேயே பயன்படுத்தப்படும்.
அன்னதாதா எனப்படும் விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை அளிக்க வேண்டியது நம் கடமை. இந்தக் கொள்முதலால் ஏற்படும் நிதிச்சுமையை டில்லி அரசே ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பின், ரபி பருவத்தில் நரேலா மற்றும் நஜப்கர் மண்டிகளில் இந்திய உணவுக் கழகம் சார்பில் கோதுமை கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் ரபி பருவத்தில், 29,000 ஹெக்டேர் பரப்பளவில், 80,000 டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.