தொழிலதிபரின் ஆதார் எண்ணை மாற்றி பணத்தை சுருட்டியது மோசடி கும்பல்: ஏ.ஐ., போலி வீடியோவால் விபரீதம்

5

ஆமாதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, 'மொபைல் போன்' எண்ணை மாற்றி, 25,000 ரூபாய் கடன் பெற்று மோசடி நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த ஒருவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்கிறார்.

இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக வங்கியில் இருந்து வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் குறுஞ்செய்திகள் வருவது நின்றுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த அதிர்ச்சிகரமான மோசடி அம்பலமானது.

இது குறித்து ஆமதாபாத் சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறிய தாவது:

ஆமதாபாதைச் சேர்ந்தவர்கள் கனுபாய் பார்மர், ஆசிஷ் வானந்த், முகமது கைப் படேல் மற்றும் தீப் குப்தா.

இதில் ஒருவர் இ - சேவை மையம் நடத்தி வந்தார். இவர்கள் தொழிலதிபர் ஒருவரின் ஆதார் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்துள்ளனர்.

அதை வைத்து, 'டீப் பேக்' எனப்படும் தத்ரூப போலி வீடியோவை உருவாக்கி உள்ளனர். இதை, இ -- சேவை மையத்தில் உள்ள ஆதார் கருவியில் காட்டி, நேரில் ஆள் இருப்பது போல் ஆதார் மென்பொருளை நம்ப வைத்துள்ளனர்.

இதன் மூலம் ஓ.டி.பி., இல்லாமலேயே தொழிலதிபரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண்ணை மாற்றினர். அதற்கு பதில் அவர்களது எண் ஒன்றை அந்த ஆதாருடன் இணைத்தனர்.

அதன்பின், 'ஜியோ பேமென்ட்ஸ்' எனப்படும், 'ஆன்லைன்' வங்கியில் கணக்கு துவங்கி, 25,000 ரூபாய் கடன் பெற்றுள்ளனர். மேலும், தொழிலதிபரின் டிஜிட்டல் லாக்கரை அணுகி பல்வேறு ஆவணங்களை எடுக்க முயற்சித்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement