வேன் மீது பஸ் மோதி விபத்து குஜராத்தில் 6 பெண்கள் பலி

சபர்கந்தா: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் சமையல் பணி செய்யும் பெண்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பஸ் மோதியதில், வேனில் சென்ற ஆறு பெண்கள் பலியாகினர்; எட்டு பேர் காயமடைந்தனர்.

குஜராத்தின் அராவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா பகுதியில் இருந்து சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகர் அருகேயுள்ள ஹன்ஜ் நோக்கி வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில், சமையல் பணிக்காக பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.

ஷாம்லாஜி - ஹிமத்நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அந்த வேன் சென்றபோது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த பஸ் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், வேனில் பயணித்த ஆறு பெண்கள் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பெண்கள் மற்றும் வேன் டிரைவர் ஆகிய எட்டு பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஹிமத்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத் துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement